விருத்தாசலம், ஜன. 20: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் மணிவாசகன்(38), விவசாயி. இவர் கடந்த 17ம் தேதி இரவு அதே ஊரைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன் என்பவருடன் பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது கோனூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் பாரத்(33) மற்றும் லட்சுமணன் மகன் மகேந்திரன்(32) ஆகிய இரண்டு பேரும் மணிவாசகத்தை வழிமறித்து நீங்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து மணிவாசகம் பெண்ணாடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாரத் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் பாரத் மற்றும் அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரும் அதே பகுதியில் கொசுவர்த்தி வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தபோது தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் 3 பேர், பாரத் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகவும் வாகனத்தை சீரமைத்து தர வேண்டும் என கேட்டபோது ஆத்திரமடைந்த தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் பாரத் மற்றும் மகேந்திரன் இருவரையும் கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாரத் கொடுத்த புகாரின் பேரில் தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகன், செந்தமிழ், தனுஷ், முத்து, மதன், சிமி,
துரைப்பாண்டி, மருதுபாண்டி, புகழேந்தி, தமிழரசன், ராமகிருஷ்ணன், செல்வபாரதி, ரமேஷ், பிரபாகரன் ஆகிய 14 பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
