பாடாலூர்: திருச்சி மாவட்டம் உறையூர் அருகே பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குணா (38). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள துறை மேலாளராக பணியாற்றி வந்தார். தினமும் பெரம்பலூருக்கு சென்றுவிட்டு, காரில் வீட்டிற்கு திரும்பி செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு, காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவில் சாலையில் நடந்து சென்றவர் மீது கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டீக்கடை முன்பக்கம் மீது மோதி, அருகே உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் கார் மோதியதில், திருச்சி மாவட்டம் நெய்குளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) என்பவர் உயிரிழந்தார். ஆனால், கார் கிணற்றுக்குள் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலை டீக்கடை முன்பக்கம் உடைந்திருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் கிணற்றில் பார்த்தபோது ஆயில் மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்து வந்த போலீசார், மீட்பு படையினர் சுமார் 4 மணி நேரம் போராடி காரையும், குணாவை சடலமாகவும் மீட்டனர்.
