பரமக்குடி: ராமேஸ்வரத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் குளிர்சாதன சொகுசு பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற இந்த பஸ்சில் 35 பயணிகள் இருந்துள்ளனர். பஸ்சை டிரைவர் செல்வம் ஓட்டிச் சென்றுள்ளார். நள்ளிரவில் பரமக்குடி – மதுரை நான்கு வழிச்சாலையில் பார்த்திபனூர் அடுத்த மருச்சுக்கட்டி என்ற இடத்தில் சென்றபோது பேருந்தின், கியர் பாக்ஸ் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தி பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றியதால் 35 பேரும் உயிர் தப்பினர்.
தொடர்ந்து பஸ் முழுவதும் தீ பரவி மளமளவென எரிந்து நாசமானது. இதேபோல், கோவைமற்றும் திருப்பூரை சேர்ந்த நண்பர்கள் 3பேர் மைசூர் சென்று விட்டு, நேற்று முன்தினம் ஊட்டி வழியாக திருப்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர். கல்லட்டி சாலையில் 4வது கொண்டை ஊசி வளைவில் கார் வரும் போது திடீரென முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. உடனே காரை நிறுத்தி விட்டு 3 பேரும் இறங்கினர். அடுத்த நொடியே மளமளவென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதில் மூவரும் உயிர் தப்பினர்.
