வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்​தில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14ம் தேதி வரை எஸ்​ஐஆர் கணக்​கெடுப்பு பணி​ நடை​பெற்று வந்​தன. இதில் 6 தேசிய கட்சிகள் மற்றும் 6 மாநில கட்சிகளை சேர்ந்த சுமார் 2.72 லட்சம் வாக்குச் சாவடி அளவிலான முகவர்கள் பணியாற்றினர். திமுக, அதிமுக, பாஜகவை சேர்ந்த தலா 60,000 வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் வாக்காளர்கள் சரியான தகவல்களை தர உதவி செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 19ம் தேதி அனைத்து மாவட்​டங்​களி​லும் வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 97.37 லட்​சம் பேர் நீக்​கப்​பட்​டனர். இதன் மூலம் தமிழகத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியிலிருந்து 5.43 கோடியாக குறைந்தது. அதனைத் தொடர்ந்துகடந்த டிசம்பர் 19ம் தேதி முதலேவாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள் புதிதாக பெயர் சேர்க்கவும் ஏற்கெனவே நீக்கப்படாதவர்கள் பெயரை நீக்கவும் கடந்த ஜனவரி 1ம் தேதி​யன்று 18 வயது பூர்த்தி அடைந்​தவர்​கள் தங்கள் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் சேர்க்கவும் படிவங்​கள் பெறப்​பட்டன. மேலும் ஆன்லைன் மூலமும் பலர் விண்ணப்பித்தனர்.

அதுமட்டுமின்றி, 12 லட்சத்து 43 ஆயிரத்து 363 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து, விபரங்களை சரி செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில், வாக்காளர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் இதுவரை ஒட்டுமொத்தமாக 13 லட்சத்து 03 ஆயிரத்து 487 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து படிவம் 7-ஐ 35,646 பேர் சமர்ப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதுவரை இந்த காலகட்டத்தில் கிடைத்த விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து, பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுபவர்கள் மட்டுமே, வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: