பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்து வரும் வாகனங்கள்: மதுராந்தகத்தில் 5 கி.மீ. போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்புவதால் அனைத்து முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பேருந்துகள், ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி14 முதல் 18ம் தேதி வரை தொடா்ச்சியாக 5 நாட்கள் தமிழக அரசு விடுமுறை அளித்தது.பொதுவாக பண்டிகை காலங்களில் சென்னையில் கல்வி, தொழில், வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

சொந்த ஊர் சென்ற மக்களின் வசதிக்காக ஆயிரக்கணக்கான சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். இந்த நிலையில் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். நேற்று காணும் பொங்கல் முடிந்து, இன்று மதியம் முதலே சென்னை நோக்கி பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சாலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு வந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டோல்கேட் நிர்வாகத்தின் சார்பில் கூடுதலாக இரண்டு கவுன்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அண்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இன்று பிற்பகலில் இருந்தே தங்கள் சொந்த வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளின் மூலம் சென்னை நோக்கி அதிக எண்ணிக்கையில் வரத்தொடங்கினா். இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையில் வண்டலூா், பெருங்களத்தூா், தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

Related Stories: