புதுடெல்லி: கோவா காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பணமோசடி நடவடிக்கைகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்தக் கும்பல் மாநிலங்களுக்கு இடையே மிகவும் நுட்பமான முறையில் போதைப் பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளது. கூரியர் மற்றும் தபால் சேவைகளைப் பயன்படுத்திப் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. மேலும், வங்கிப் பரிவர்த்தனை, யுபிஐ, கிரிப்டோ கரன்சி மற்றும் நேரடியாகப் பணம் எனப் பல வழிகளில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் பனாஜி மண்டல அலுவலகம் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) இணைந்து நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டன. கோவா, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா மற்றும் டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 26 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. கோவாவில் மட்டும் 12 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப் பணம், கஞ்சா, எம்டிஎம்ஏ, எக்ஸ்டசி, கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சோதனையின் மூலம் மிகப் பெரிய கடத்தல் வலையமைப்பை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
