தை அமாவாசையை பௌர்ணமியாக்கிய அன்னை அபிராமி!

தை அமாவாசை – 18.1.2026

அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கும். இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. சிவபெருமானின் அஷ்ட வீர தலங்களில் எட்டாவது வீரத் தலமாகத் திகழ்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். மேலும் திருநாவுக்கரசர் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய மூவர் இத்தலத்தை பற்றி பாடல் இயற்றி பாடல்பெற்ற தலமாக திகழ்கிறது. அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தலம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் மரத்தை தல விருட்சகமாக கொண்டுள்ளது.

முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர்ந்தளிக்க முயலும்போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடாத காரணத்தால் சினம் கொண்டவிநாயக பெருமான் இத்திருக்கோயிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை ஒளித்துவைத்தார். அக்குடமே பிற்காலத்தில் இத்திருக்கோயிலில் சிவலிங்கமாக உருவானதால் (மாறியதால்) அமிர்தம்+கடம் `அமிர்தகடேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார் இங்குள்ள மூலவர். இப்படி செய்த விநாயகர் இத்திருக்கோயிலில் `கள்ள விநாயகர்’ என்று ஒரு தனி சந்நதி பெற்று `கள்ளவாரணம்’ என பெயர் பெற்று அபிராமிபட்டர் மூலமாக ஒரு பதிகம் பாடல் பெற்றார், இவ்விநாயகர்.

மேலும் சரபோஜி மன்னர் ஆட்சிகாலத்தில் பக்தன் ஒருவருக்காக அபிராமி அம்பாள் `தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி `அபிராமி அந்தாதி’ அருள செய்த தலமும் இத்தலமே. அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார். பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது. அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டு கின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை பவுர்ணமிநிலவைப் போல எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.

இது நிகழ்ந்ததே தை அமாவாசை அன்றுதான்

அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் வருடாவருடம் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹார பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் – 18 நாட்கள் – மகம் நட்சத்திரத்தன்று யமசம்ஹாரத் திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும். தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும் – 6ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே எழுந்தருள்வார். கார்த்திகை – சோம வாரம் 1008 சங்காபிஷேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது. இத்தலத்தில், காலசம்ஹாரமூர்த்தி சந்நதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது.

திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் 100வயது பூர்த்தி, கனகாபிஷேகம் 90 வயது, சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம். திருக்கடையூரில் 60, 80ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது.

அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின்போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சந்நதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச்சென்ற பாதாள குகை இருக்கிறது. திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச் சந்நதி இருக்கிறது. இச்சந்நதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கிவிட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். எமன் லிங்கத்தின் மீது பாசக் கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது.

திருக்கடையூர்

Related Stories: