கூட்டணிக்கு வரும் கட்சிகளை பகிரங்கமாக கூற முடியாது: தயங்கி தயங்கி சொல்லும் எடப்பாடி

 

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேச்சேரியில் அதிமுக சார்பில் பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். விழா மேடை எதிரே 108 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. இதனை பார்வையிட்ட அவர், தனி மேடையில் அமர்ந்து வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த 50 காளைகளையும் பார்வையிட்டார்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பெரியவர்கள் சொன்ன வார்த்தைக்கு ஏற்ப, இந்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் நம் அத்தனை பேருக்கும் வழி பிறக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். எங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர உள்ளது.

நமது கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி. நிச்சயமாக அதிக இடங்களில் வென்று, அதிமுக ஆட்சி அமைக்கும். உலகமே பாராட்டும் வகையில், நமது பிரதமர் சிறப்பு பெற்றிருக்கிறார். கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி நம்மோடு இருக்கிறார். எனக்கு வரும் தகவல்களின் படி காங்கிரஸ் கூட்டணி மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. இன்னும் சில கட்சிகள் வரும். இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து, தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுகவில் இருந்து அதிமுக பிரியாமல் ஒரே கட்சியாக இருந்த போது இந்தி திணிப்பு எதிர்ப்பு பிரசாரம் நடந்தது. அந்த சம்பவம் அந்த காலகட்டத்தில் நடந்தது. அதனை பராசக்தி படமாக எடுத்திருக்கிறார்கள். நம் முன்னோர்கள் தமிழ் மொழியை காக்க போராடி இருக்கிறார்கள். மொழிப்போர் தியாகிகளுக்காக நாங்கள் ஜனவரி 25ம்தேதி அஞ்சலி செலுத்துகிறோம்’ என்றார்.

* காலில் விழுந்த பாமக எம்எல்ஏ கண்டு கொள்ளாத எடப்பாடி

பொங்கல் விழாவில், மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம், பாமக மாநிலத் துணை தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்த எம்எல்ஏ சதாசிவம், திடீரென அவரது காலில் விழுந்து கும்பிட்டார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் அவர் எதிரில் இருந்த நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இதேபோல், பொங்கல் விழாவில், எடப்பாடிக்கு பூச்செண்டு கொடுப்பதற்காக, ஐ.ஜே.கே நிர்வாகி ஒருவர் மேடை ஏறினார். அவருடன் வந்த நிர்வாகிகளை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால், அவர்களுக்கும் பாதுகாவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஐஜேகே நிர்வாகியை, காவலர்கள் முதுகில் கை வைத்து தள்ளி வெளியேற்றினர். அவர் கையில் வைத்திருந்த பூச்செண்டு கசங்கி சிதறி கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோபத்துடன் திரும்பி சென்றனர்.

* எடப்பாடி விழாவில் அதிமுக தொண்டர் சாவு

சேலம் மாவட்டம், மேச்சேரியில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த விழாவில் விருதாசம்பட்டியை சேர்ந்த அதிமுக தொண்டர் குப்புசாமி (67) என்பவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, பிற்பகல் 12.30 மணி அளவில், வீடு செல்வதற்காக தனது டூவீலரை எடுத்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காலை 9.30 மணி அளவில் பொங்கல் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், 8.30 மணிக்கே பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். இவர்கள் பகல் 1 மணி வரை காத்திருந்ததால் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Related Stories: