திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீது கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை அதிகாரிகள் அகற்றியது தொடர்பாக, தர்கா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு விழாவையொட்டி கடந்த டிச.21ம் தேதி தர்கா அருகே உள்ள கல்லத்தி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
கல்லத்தி மரம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த வாரம் ஐகோர்ட் மதுரை கிளை சார்பில் விளக்கம் கோரப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கோயில் நிர்வாகம் தரப்பில் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தர்கா தரப்பில் கொடியேற்றப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வருவாய்த்துறை, அறநிலையத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து, மலை மீது கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை அகற்றினர். இதையடுத்து, தர்கா தரப்பில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், `கல்லத்தி மரத்தில் கொடியேற்றுவது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிநதுள்ள நிலையில் தற்போது கொடி அகற்றப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
