திண்டுக்கல்: தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகளிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு, மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணலும் நடத்தி வருகிறார். இதில், பூட்டு மாவட்டமான திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் மனு செய்துள்ளார்.
இவருக்கு போட்டியாக திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் மகன் வீரமார்பன் (எ) பிரேம், தனக்கு வாய்ப்பு கேட்டு விருப்ப மனு செய்துள்ளார். இவர், திண்டுக்கல் முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவராகவும், தற்போது அதிமுக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராகவும் உள்ளார்.
எம்ஜிஆர் அதிமுகவை துவக்கிய காலத்தில் இருந்து அதில் இருப்பவர் முன்னாள் மேயர் மருதராஜ். இவரும், திண்டுக்கல் சீனிவாசனும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 1996 சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மருதராஜ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்பு 2011ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மருதராஜ் மேயர் பதவியை பிடித்தார். மருதராஜ் தற்போது மாநில அமைப்பு செயலாளராக உள்ளார். தற்போது போட்டி அரசியலுக்காக அவர் தனது மகனை மாஜி அமைச்சருக்கு எதிராக களமிறக்கியிருப்பதால், திண்டுக்கல் சீனிவாசன் கோஷ்டியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே, திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் சீனிவாசன் ஒரு கோஷ்டியாகவும், நத்தம் விஸ்வநாதன் ஒரு கோஷ்டியாகவும், திண்டுக்கல் மருதராஜ் தனி கோஷ்டியாகவும் உள்ளனர். திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை முன்னாள் மேயர் மருதராஜ் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் உள்ளனர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த தொகுதியில் அதிக அளவு வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2016ல் சசிகலாவின் ஆதரவு மூலம் திண்டுக்கல் சீனிவாசன், இத்தொகுதியில் போட்டியிட்டார். அதே நேரத்தில் ஐந்து முறை திண்டுக்கல் தொகுதி எம்பியாகவும், இரண்டு முறை எம்எல்ஏவாகவும், அமைச்சர் என கட்சியில் பலமாக காலூன்றி உள்ளார். ஆனாலும், அவரது வயது மூப்பு மற்றும் உளறல் பேச்சு காரணமாக அவருக்கு கட்சியில் சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கட்சி பொருளாளராக இருப்பதால் அவர் சீட்டைப் பெறுவதற்கு கடும் முயற்சி எடுப்பார்.
அதே நேரத்தில் கட்சி தலைமை இளைஞர்களுக்கு வழி விட முடிவெடுத்தால் முன்னாள் மேயர் மருததராஜ் மகனுக்கு சீட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன் சீட் கேட்பது தெரிந்தும், மருதராஜ் தரப்பினர் அவருக்கு எதிராக விருப்ப மனு தாக்கல் செய்தது, கோஷ்டி பூசலை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. அதே நேரம் இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சீட் கிடைப்பது சந்தேகம் தான் என அதிமுகவினரே பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.
