பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை தழுவிய பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது

 

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 870 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 461 வீரர்கள் களமிறங்கினர். மதுரை அருகே மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு பாலமேட்டு ஜல்லிக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இதில், 870 காளைகள், 461 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். அலங்காநல்லூரில் நாளை அனல் பறக்கும் ஜல்லிக்கட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் உலகப் புகழ் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இதன்படி பொங்கல் திருநாளான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. மாட்டுப்பொங்கலான இன்று பாலமேட்டில் அமர்க்களமான ஜல்லிக்கட்டு நடைபெற்று நிறைவடைந்தது. விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் பொந்துகம்பட்டி அஜித், பொதும்பு பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த நிலையில், குலுக்கல் முறையில் அஜித் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் இதுவரை 4 முறை கார் வென்ற பிரபாகரன் 5வது முறை காரை வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை தழுவிய பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 2ஆம் இடம் பிடித்த பொதும்பு பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்தி 11 காளைகளை பிடித்து 3வது இடம் பிடித்தார். குலமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

 

Related Stories: