சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு உற்சாகமாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். உலக தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா இன்று போகியுடன் தொடங்கி நாளை சூரியன் பொங்கல், அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என்று கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தனது எக்ஸ் தளத்தில் ‘பொங்கலோ பொங்கல்!’ என்று தமிழில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது தமிழ் சமூகத்தினரால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, குடும்பத்துடன் ஒன்று கூடி, நன்றி தெரிவித்து, நமது வேர்களைப் போற்றி, நம்பிக்கையான புதிய ஆண்டை வரவேற்கும் நேரமாகும்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், லிட்டில் இந்தியா அல்லது இந்திய மரபுடைமை இடங்களுக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை கண்டு ரசிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
