சென்னை: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நடிகை கவுதமியிடம் நேற்று எடப்பாடி நேர்காணல் நடத்தினார். அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சி ஒன்று வருவதாகவும் எடப்பாடி கூறினார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தநிலையில், 4வது நாளாக நேற்றும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. அப்போது நடிகையும், கட்சி நிர்வாகியுமான நடிகை கவுதமியிடம் பழனிசாமி நேர்காணல் நடத்தினார். அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார். விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேர்காணல் நடத்தினார். அப்போது அவர் ,‘அதிமுக கூட்டணியில் ஒரு சில நாட்களில் புதிய கட்சி ஒன்று வரவுள்ளது. மேலும், சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்; அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்,’ என்றார்.
* பொதுக்கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
எம்ஜிஆரின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 18ம் தேதி மற்றும் 19ம் தேதி (ஞாயிறு, திங்கள்) ஆகிய 2 நாட்கள் ‘எம்ஜிஆர் 109வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ நடைபெறும். கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்ட பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிகளை, எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி 18ம் தேதி தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
