கீழக்கரை, ஜன.8: கீழக்கரை அருகே தென்பொதிகை மாமுனிவர் அகத்திய முனிவருக்கு 9ம் ஆண்டு குருபூஜை நடந்தது மார்கழி சதுர்த்தி திதி, ஆயில்யம் நட்சத்திரம் சித்தயோக நாளில் அகத்தியருக்கு குருபூஜை விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோமாதா, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. மூலவர் அகத்தியர் முனிவருக்கு காலை 10:30 மணியளவில் 16 வகை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சாது துறவிகளுக்கு மகேஸ்வர பூஜைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் அகத்தியர் பாடல்கள், பஜனை நாமாவளி பாடி சுவாமி தரிசனம் செய்தனர். காசி தியாகராஜ சுவாமி சீடர்கள், அகஸ்தியர் கோயில் ஐயப்ப பக்தர்கள், கோயில் நிர்வாகத் தலைவர் கணேசன், செயலாளர் கண்ணன், பொருளாளர் பாண்டி, தியாகராஜ ஸ்வாமிகள் தலைமைச் சீடர் பெரியசாமி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.
