×

தாராபுரம் அருகே இன்று காலை வேன் கவிழ்ந்து பிளஸ் 2 மாணவி பலி: 16 பக்தர்கள் காயம்

 

தாராபுரம்: தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்து பிளஸ் 2 மாணவி பலியானார். 16 பக்தர்கள் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (40). இவர் தாராபுரம் சர்ச் சாலையில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் கோபிகா (17). தாராபுரத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மாணவி நாள்தோறும் தங்களது கிராமத்தில் இருந்து மொபட்டில் வந்து தாராபுரம்-பழனி சாலையில் உள்ள தாசவநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் மொபட்டை நிறுத்திவிட்டு பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இன்று காலை பள்ளிக்கு செல்ல மொபட்டில் தாசநாயக்கன்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியாக திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த முருக பக்தர்கள் வேனில் பழனி சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். தாசநாயக்கன்பட்டி அருகே இன்று காலை சுமார் 8 மணியளவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மொபட்டில் சாலையை கடக்க முயன்ற மாணவி மீது மோதி வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனுக்கு அடியில் சிக்கி மாணவி கோபிகா உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார். வேனில் பயணம் செய்த முருக பக்தர்களான காங்கயத்தை சேர்ந்த் செல்வ பரணிதரன் (27), குமாரசாமி (60), ஜவகர் (45), பழனிச்சாமி (40), செந்தில், சுகுமார், தாமரைக்கண்ணன், சேனாதிபதி உட்பட 16 பேர் காயமடைந்தனர்.

அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் பலியான மாணவி கோபிகாவின் உடல் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Tarapuram ,Plus 2 ,Murugan ,Nalligaundan Valasu ,Dindigul district ,Tarapuram Church Road.… ,
× RELATED முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு...