நாட்டு துப்பாக்கியால் விலங்குகளை வேட்டையாடிய 8 பேர் கைது

திருக்கோவிலூர், ஜன. 24: கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக்குக்கு திருக்கோவிலூர் காட்டு வனப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசங்களை விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருக்கோவிலூர் டிஎஸ்பி ராஜீ மேற்பார்வையில் ஆய்வாளர் செல்வம், உதவி ஆய்வாளர்கள் சிவச்சந்திரன், உலகநாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது துரிஞ்சிப்பட்டு- நெடுமுடையான் வனப்பகுதியில் 8 பேர் நாட்டு துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடினர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார்  அவர்களை பிடித்து விசாரித்தபோது நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த  சுப்ரமணி மகன் சிவலிங்கம்(50), பெரியதம்பி மகன் அய்யப்பன்(33), குள்ளன் மகன் ஏழுமலை(51), சுப்ராயன் மகன் கதிர்வேல்(30), குட்டையன் மகன் சக்திவேல்(65), நாராயணசாமி மகன் முத்துலிங்கம்(42), ராமசாமி மகன் கேசவன்(51), காத்தவராயன் மகன் ராஜா(55) என்பது தெரியவந்தது. இவர்களை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்து 2 நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>