அரையாண்டு விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு 1.33 லட்சம் பேர் வருகை: நிர்வாகம் தகவல்

 

கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், அரையாண்டு விடுமுறை நாட்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் கூறியதாவது: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அரை ஆண்டு விடுமுறை நாட்களில் மிக அதிக பார்வையாளர் வருகை புரிந்துள்ளனர். டிசம்பரில் மட்டும் 1.33 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை வரவேற்கும் வகையில், பூங்காவில் 4 புத்தம்புதிய கழிப்பறை வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பூங்கா முழுவதும் ஆர்ஓ குடிநீர் வசதி பார்வையாளர்கள் பயன்பாட்டிற்கு உள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கான குழந்தை பராமரிப்பு அறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட இடங்களில் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. காத்திருப்பு பகுதிகள் மற்றும் ஓய்வெடுக்கும் கொட்டகைகள் மற்றும் குழந்தைகள் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் ஆகியன பயன்பாட்டிற்கு ஏதுவாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட சியாமோங் கிப்பன் மற்றும் புதிதாகப் பிறந்த நீர்யானைகள், இந்திய காட்டு மாடு, சதுப்பு நில மான், முள்ளம்பன்றி, அனுமன் லங்கூர், நீலகிரி லங்கூர் மற்றும் அனகொன்டா ஆகியவை பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்த்து மகிழ்விக்கின்றன. அது மட்டுமல்லாமல் பார்வையாளர் அனுபவத்தை வளப்படுத்தும் வகையில், 7டி தியேட்டர் மீண்டும் திறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மாலை 4 மணிக்கு தினசரி யானைகளுக்கு உணவளிக்கும் நிகழ்வு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இது பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான வனவிலங்கு அனுபவத்தை வழங்கும் நிகழ்வாக உள்ளது.

பார்வையாளர்கள் பூங்காவை சுலபமாக சுற்றிப்பார்க்க 25 பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் மற்றும் நான்கு சபாரி பேருந்துகள் பூங்காவில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் டிசம்பர் மாதத்தில், 25,000க்கும் மேற்பட்டோர் பூங்காவை சுற்றிப்பார்த்தனர். மேலும் கூடுதல் பார்க்கிங் பகுதியிலிருந்து பார்வையாளர்களை அழைத்துச் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பார்வையாளர்களுக்கு சுலமான முறையில் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் டிக்கெட் வசதிகள் நீண்ட வரிசைகளைக் குறைக்க உதவியது. 100% டிக்கெட் முன்பதிவுகள் டிஜிட்டல் தளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. மேலும் வரவிருக்கும் பொங்கல் விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை வரவேற்க முழுமையாக தயாராக உள்ளது. இவ்வாறு பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

Related Stories: