தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: பெயர் இல்லாதவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியாது

 

சென்னை: எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்ததையடுத்து தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வர உள்ள சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும். தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அதாவது அவர், ‘‘நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும். பதற்றமில்லாத சூழலில் அதை செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பணிகளை முறையாக செய்ய முடியும். மாறாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்த பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரமாக மட்டுமே பார்க்கிறோம்’’ என்று தெரிவித்து இருந்தார். இதே போல திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் எஸ்ஐஆர் பணிக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர். தொடர் எதிர்ப்புகளையும் மீறி எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது.

அதே நேரத்தில் தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. இதில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் இறந்த வாக்காளராகவும், 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள், 3 லட்சத்து 39 ஆயிரத்து 278 இரட்டை பதிவு வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக பெயர் சேர்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதேபோல், இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

மொத்தமாக 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தை தொடர்ந்து பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முதலில் தெரிவித்து இருந்தார். இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்தது. அதாவது நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் தீர்ப்புகளின் அடிப்படையில் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டது. அதே நேரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. மாவட்டங்களில் காலை 10 மணிக்கு மேல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதன்படி மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியீடுவார்கள். தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிடுகிறார். அப்போது எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற முழு விவரம் தெரிய வரும். இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள், voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI NET கைபேசி செயலி மூலமாக தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் ஓட்டப்படும். அதில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா? என்பதை வாக்காளர் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியும். பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதனால், இன்று வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேலும் தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: