கோவை: திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மேற்கு மண்டல மாநாடு கோவை கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழக துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது: பாஜவிற்கு எதிரான ஜனநாயக போரை முதல்வர் மு.கஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் என மற்ற மாநில தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆட்சியை பொறுத்தவரை ஏராளமான திட்டங்களை தந்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன், மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார். இது தான் நம் ஆட்சிக்கும், சங்கி கூட்டத்துக்கும் உள்ள வித்தியாசம். மக்களிடம் உள்ளவற்றை பிடுங்குவது பாஜ ஆட்சி. மக்களுக்கு கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி. ஒன்றிய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் ஒதுக்கவில்லை. பட்ஜெட் முழுதாக படித்து முடிப்பதற்குள் அதிமுக பழனிசாமி பட்ஜெட் சூப்பர் என பாராட்டுகிறார். அரசியலில் நாம் முரட்டு பக்தர்கள், முரட்டுத் தொண்டர்களை பார்த்திருப்போம். ஆனால், பிரதமர் மோடிக்கு முரட்டு அடிமையாக பழனிசாமி மாறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் படம் திரையரங்கில் பார்த்து பழனிசாமி கண்ணீர் விட்டார். எம்.ஜி.ஆர் இன்றைக்கு உயிரோடு இருந்தால், என் கட்சியை இப்படி ஆக்கிவிட்டாயே என பழனிசாமியை நினைத்து அழுதிருப்பார். பழனிசாமி 2019ல் அதிமுகவை பாஜவுக்கு அடகு வைத்தார். 2021ல் அதிமுகவை பாஜவுக்கு லீசுக்கு விட்டார். 2026ல் அதிமுகவை பாஜவுக்கு விற்று விட்டார். தன் சுயநலத்தால் பழனிசாமி, அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை அறிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறார். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து நடக்கும் மிரட்டல்களுக்கு, தலைவர் மதுரையில் தெளிவாக பதில் கூறிவிட்டார். வழக்கு போடட்டும், பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறிவிட்டார். உயிரே போனாலும், சுயமரியாதையை விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத் தர மாட்டோம். தற்போது நடக்க உள்ளது 8 கோடி மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் போராகும். தமிழகத்தை சீரழிக்க பாசிச, அடிமைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வருகின்றனர்.
அதை தடுக்கும் பொறுப்பு இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது. அடுத்த 50 நாட்கள் கடினமாக உழைத்தால், அடுத்த 5 வருடங்கள் தமிழகத்தை காப்போம் என்பதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும் இடையே நடக்கும் ஜனநாயகப் போர். இந்த போரில், தமிழ்நாடு நிச்சயம் ஜெயிச்சு காட்டும். டெல்லிக்கும் எப்பொழுதும் தமிழ்நாடு அவுட் ஆப் கன்ட்ரோல் தான் என்பதை தமிழ்நாட்டு இளைஞர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதற்கு இளைஞரணியின் உழைப்பு முக்கியம். களத்தில் ஜெயித்து மீண்டும் ஆட்சி அமைப்பது உதயசூரியன் தான். வெல்வோம் 200, படைப்போம் வரலாறு என தலைவர் டார்க்கெட் கொடுத்துள்ளார். அடுத்த 50 நாட்களுக்கு இளைஞரணியினர் களத்தில் இறங்கி பிரசாரம் செய்தால், 200க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக, மதச்சார்ப்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
