சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் 1000 ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் ரூ.560 கோடியில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 மே திங்கள் 7ம் நாள் முதல்வராக பொறுப்பேற்றது முதல் 22.2.2026 வரை 20 முதல் 400 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4,332 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. 12,931 கோயில்களில் ரூ.8,100.70 கோடியில் நடந்து வரும் 29,479 திருப்பணிகளுள் ரூ.4,346 கோடியில் 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் நன்கொடையாளர் நிதி மூலம் ரூ.2,000.87 கோடி மதிப்பில் 12,220 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திராவிட நாயகர் ஆட்சியில், 1,055 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,436.31 கோடி மதிப்பிலான 8,107.03 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நவீன ரோவர் கருவிகள் மூலம் 2,38,060.24 ஏக்கர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1,50,221 எல்லைக் கற்கள் நடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் திட்டத்தில், அரசு நிதி ரூ.425 கோடி, கோயில் நிதி, நன்கொடையாளர் நிதி, பொதுநலநிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் 1000 ஆண்டுகள் பழமையான 352 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 88 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அர்ச்சர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடைகள் மற்றும் சீருடைகள், ரூ.221 கோடி மதிப்பீட்டில் 616 குடியிருப்புகள், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 ஆகவும் உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை, குடும்ப நலநிதி ரூ.4 லட்சமாக உயர்வு, ஆண்டிற்கு ஒருமுறை முழு உடற் பரிசோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ரூ.3.25 கோடி அரசு நிதியில் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு, ஓராண்டு காலம் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், வடலூரில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் வகையில் 15.2.2026 அன்று சென்னை, கீழ்ப்பாக்கத்தில், அனைத்துலக வள்ளலார் மாநாடு வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. முதல்வர் தலைமையிலான ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதியாக ரூ.1,187.83 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
