நெல்லை குடியிருப்பு பகுதியில் கொட்டும் மழையில் இரவில் ஜோடியாக கரடி உலா: சாலையில் நடந்து செல்வோரை விரட்டியதால் பரபரப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டு பன்றி உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவாரத்திலுள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10க்கும் மேற்பட்ட கரடிகள் சமீபகாலமாக பாபநாசம், டாணா, விகேபுரம், அனவன்குடியிருப்பு, அருணாசலபுரம், பசுக்கிடைவிளை, திருப்பதியாபுரம், அகஸ்தியர்புரம், கோட்டைவிளைபட்டி போன்ற இடங்களில் குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது. இவை பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கி இரவு நேரங்களில் சாலைகளில் ஹாயாக உலா வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் விகேபுரம் அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி தெற்கு தெருவில் இரண்டு கரடிகள் ஜோடியாக சாலையில் சுற்றி திரிந்தது. கொட்டும் மழையில் இரண்டு கரடிகளும் ஜோடியாக குடியிருப்பு பகுதிகள் நிறைந்த தெருவில் சர்வ சாதாரணமாக நடமாடியது. அப்போது அவ்வழியாக வேலை முடிந்து வீடுகளுக்கு செல்வோரை கரடிகள் விரட்டியது. இதில் சுதாரித்துக் கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள வீடுகளுக்குள் பதுங்கி கொண்டனர். அதன்பிறகு ஜோடி கரடிகளை தெருநாய்கள் விரட்டியதால் அங்கிருந்து சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாகவே இப்பகுதியில் இரவு நேரங்களில் கரடிகள் ஜோடியாக உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சமாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வருபவர்களை கரடிகள் விரட்டி வருகிறது. வனத்துறை அலட்சியம் காட்டாமல் இரவு நேரத்தில் உலா வரும் ஜோடி கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: