கொரோனா விடுமுறையில் வீடுகளில் வளர்த்த மரக்கன்றை பள்ளியில் நட்ட மாணவிகள்

சாயல்குடி, ஜன.24:  கொரோனா விடுமுறைக்கு வீடுகளில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை அரசுபள்ளியில் மாணவர்கள் நட்டனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பில் 21 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 9ம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கு தேசிய பசுமை படை சார்பில் விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதனை மாணவர்கள் வீடுகளில் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். கடந்த 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதால், வீடுகளில் வளர்த்து வந்த மரக்கன்றுகளை நேற்று பள்ளி வளாகத்தில் நட்டனர்.

பள்ளியில் நடந்த மரக்கன்று விழாவிற்கு தலைமையாசிரியர் ரெனிஷா தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் கூறும்போது, மரக்கன்றுகளை மாணவர்கள் வீடுகளில் தண்ணீர் ஊற்றி, பாதுகாப்போடு, பராமரித்து நன்றாக வளர்த்தனர். அதனை பள்ளி வளாகத்தில் நட்டுள்ளோம். ஒவ்வொரு மாணவரும், தான் நட்ட மரக்கன்றினை தினந்தோறும் தண்ணீர் ஊற்றி, பாதுகாப்பாக பராமரிக்க உள்ளனர். நன்றாக வளர்க்கும் மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு இயற்கையின் மீது ஆர்வம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories:

>