முத்துப்பேட்டை, ஜன. 3: முத்துப்பேட்டை வட்டம் உதயமாத்தாண்டபுரம் ஊராட்சி தெற்கு பள்ளியமேடு கிராமத்தைச் சேந்த 42 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை சார்பில் அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
விழாவில் அரசு இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் வழங்கினர். இலவச பட்டா பெற்றுக்கொண்ட பயனாளிகள் தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் நன்றி கூறினர். தொடர்ந்து முத்துப்பேட்டை ஒன்றியம் ஆலங்காடு ஊராட்சி அருகில் உள்ள வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றியழகன், விஜயலட்சுமி, வட்டார வேளாண்மை குழு தலைவர் மனோகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகையன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
