இங்கிலாந்து பயிற்சியாளராக மெக்கல்லம் தொடர வேண்டும்: கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆதரவு

சிட்னி: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று கோப்பையைத் தக்கவைத்தது. ஆனால் இங்கிலாந்து அணி, மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்டில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வென்று ஆறுதல் பெற்றது. தொடரின் 5வது மற்றும் இறுதி டெஸ்ட் நாளை சிட்னியில் துவங்குகிறது. ஆஷஸ் தொடரை இங்கிலாந்து இழந்ததால் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லத்தை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், இங்கிலாந்து பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லமே தொடர வேண்டும் என டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இங்கிலாந்து கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தானும், மெக்கல்லமும் சரியான நபர்கள். மெக்கல்லம்மை தவிர வேறு யாராலும் இந்த அணியை பெரிய உயரத்துக்கு கொண்டு செல்ல முடியும் என தன்னால் பார்க்க முடியவில்லை. வருங்காலங்களில் இங்கிலாந்து அணி முன்னேற்றம் அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கேப்டன், பயிற்சியாளர் என்ற முறையில் எங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது, நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து அணியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேச இருக்கிறோம். ஒவ்வொரு வீரரையும் முன்னோக்கி நகர்த்துவதில் முயற்சிக்க வேண்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மெக்கல்லத்திடம் ஒருநாள், டி20 போட்டிக்கான பயிற்சியாளர் என்ற இரட்டை பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் மீதான இந்த கூடுதல் பொறுப்பு டெஸ்ட் அணியை பாதிக்கவில்லை. அவர் இரண்டு வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது என்றார்.

Related Stories: