ஊட்டி தேயிலை பூங்காவில் கோடை சீசனுக்காக 3 லட்சம் மலர் நாற்று நடவு: விரைவில் பணிகள் முடியும்

 

ஊட்டி: கோடை சீசனுக்காக ஊட்டி தேயிலை பூங்காவில் 3 லட்சம் மலர் நாற்றுக்கள் மற்றும் அலங்கார செடிகள் நடவு பணிகள் துவங்கியுள்ளது. ஓரிரு நாட்களில் இப்பணி முடிவடைந்து விடும். கோடையில் பல லட்சம் மலர் செடிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். நீலகிரி மாவட்டத்திற்கு கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வாடிக்கை. அப்போது, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு அதில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். மேலும் அலங்கார செடிகளை கொண்டு பூங்கா முழுவதிலும் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வர்.

ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்காவிலும் ஆண்டுதோறும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா வண்ணமயமாக காட்சியளிக்கும். மேலும் இங்கு பல லட்சம் அலங்கார செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு அவைகள் இந்த பூங்கா முழுவதிலும் அலங்கரித்து நடவு செய்யப்படும். மேலும் மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பூங்காவில் மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் உற்பத்தி துவக்கப்படும். இந்நிலையில் வரும் கோடை சீசனுக்காக தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுக்கள், அலங்கார செடிகள், தொட்டிகள், தொங்கும் மலர் தொட்டிகள் ஆகியவை தயார் செய்யப்பட்டன. தற்போது இந்த மலர் செடிகள் நடவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.

30 வகையான மூன்று லட்சம் மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது பூங்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடவு செய்யும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மலர் செடிகளில் ஏப்ரல் மாதம் மலர்கள் பூத்து விடும். கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தேயிலை பூங்காவில் பல லட்சம் மலர் செடிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்து செல்லலாம்.

Related Stories: