இந்தியாவில் கடந்த 2025ல் 166 புலிகள் இறப்பு: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்

டெல்லி: இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையே, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 166 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டை ஒப்பிடுகையில் (126) கடந்த 2025ம் ஆண்டு, கூடுதலாக 40 புலிகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக, உயிரிழந்தவற்றில் 31 குட்டிகள் அடங்கும் என்பது வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாநில வாரியாகப் பார்க்கும்போது, மத்திய பிரதேசம் 55 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (38), கர்நாடகா (22), கேரளா (13) மற்றும் அசாம் (12) ஆகிய மாநிலங்கள் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் 2025-ல் மட்டும் 22 புலிகள் பலியாகியுள்ளன, இது மாநிலத்தின் பாதுகாப்பு மேலாண்மைக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வந்தாலும், அதற்கேற்ப அவை வாழ்வதற்கான வாழ்விடப் பரப்பு அதிகரிக்கவில்லை.

போதிய இடவசதி இல்லாததால் புலிகளுக்கு இடையே ஏற்படும் எல்லைத் தகராறு மற்றும் மோதல்கள் உயிரிழப்பிற்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகின்றன. இது தவிர, வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் அமைக்கப்படும் சட்டவிரோத மின்வேலிகள் மற்றும் மனித-விலங்கு மோதல்களும் இந்தப் பாதிப்பைத் தீவிரப்படுத்துகின்றன.

Related Stories: