தென்னிந்திய மூத்தோர் தடகள போட்டியில் சாதனை; ஒரு தங்கம், 2 வெள்ளி வென்ற ஓய்வு எஸ்ஐக்கு, டிஎஸ்பி பாராட்டு

மன்னார்குடி, ஜன . 1: தென்னிந்திய அளவிலான 2வது மூத்தோர் தடகள சாம்பியன் பட்ட போட்டிகள் திருவண்ணாமலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், நடைபோட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 35 வயது முதல் 95 வயதுக்குட்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜன் (72) என்பவர் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டு 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் 30 வினாடிகள் ஓடி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். மேலும், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் வென்றார். பின்னர், நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத் தலைவர் உஜாகர் சிங் ஐஏஎஸ் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜனுக்கு சான்றிதழ் வழ ங்கி பாராட்டினார்.

தென்னிந்திய அளவிலான போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றதன் மூலம் வரும் மார்ச் மாதம் பஞ்சாபில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மூத்த தடகள சாம்பியன் பட்ட போட்டிகளில் ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜன் தமிழ்நாடு சார்பில் பங்கேற்க உள்ளார். தகவலறிந்த மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணன் தென்னிந்திய அளவிலான மூத்தோர் தடகள சாம்பியன் பட்ட போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜனை தனது அலுவலகத்திற்கு நேற்று வரவழைத்து அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்தினார்.

Related Stories: