சிவகாசி, ஜன.1: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் நேற்று முன்தினம் இரவு திறக்கப்பட்டது. சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழமையான வைணவத்திருத்தலமான நின்ற நாராயணப்பெருமாள் கோயில் திருத்தங்கல்லில் அமைந்துள்ளது. கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் – ஸ்ரீசெங்கமலத்தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் சர்வ அலங்காரத்துடன், சயன திருக்கோலத்தில் ஸ்ரீசெங்கமலத்தாயாருடன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். சயன சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நள்ளிரவு 12.10 மணி அளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா, நாராயணா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். தொடர்ந்து கோயிலின் முன் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். சொர்க்க வாசல் திறந்தவுடன் எழுந்தருளிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். முன்னதாக விடிய விடிய கண்விழித்த பக்தர்கள் கோயிலில் பஜனை செய்து தங்களது பக்தியை வெளிப்படுத்தினர். சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தேவி மற்றும் திருவிழா உபயதாரர்கள் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பு விழாவில் மேயர் சங்கீதாஇன்பம் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
