சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் வகையில் பொதுமக்களிடம் கருத்து கேட்க பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது. இது ஒருபுறம் இருக்க, அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
அதன்படி, திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உடன்பிறப்பே வா’ என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஜூன் மாதமே தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், வர்த்தகர் அணி துணை தலைவர் அமைச்சர் கோவி.செழியன், சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாஉள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த 22ம் தேதி நடந்தது. அப்போது, திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என கனிமொழி கூறியிருந்தார். இந்த குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளது. இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களின் கருத்துகளை கேட்பதற்காக திமுக ஒரு பிரத்யேக மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த செயலியை திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்கிறார். மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை, கருத்துகளை இதன் மூலமாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஜனவரி 9ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகளை கேட்ட பின்னர், இந்த குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் அறிக்கையை தயாரித்து வழங்கும். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சரிபார்ப்பு ஒப்புதல் வழங்குவார். அதன் பின்னர் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
