துவரங்குறிச்சி அருகே சாலையை சீரமைக்க கேட்டு மக்கள் மறியல்

துவரங்குறிச்சி, டிச. 31: துவரங்குறிச்சி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறை வரை நான்கு வழிசாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் இடையில் உள்ள காரைப்பட்டியில் சுமார் 800 மீட்டர் சாலை அமைக்காமல் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன.

இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறி துவரங்குறிச்சி, மணப்பாறை சாலை காரப்பட்டியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநத்தம் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியலை பொதுமக்கள் தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று கூறி கலைந்து சென்றனர்.

 

Related Stories: