ஜெயங்கொண்டம், டிச. 31: ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோயில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள வீரநாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோயில் கிராமத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சியும், சிறப்பு பூஜை நடந்தது.
அதைத்தொடர்ந்து பரமபத சொர்க்க வாசல் காலை 5.50 மணி அளவில் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வீரநாராயண பெருமாளை பய பக்தியுடன் வணங்கினர். அதன்பிறகு கோயில் உள் பிரகாரத்தில் வீரநாராயண பெருமாள் வீதி உலா வந்து காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு நெய்வேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோயிலிலும், சம்போடை கிராமத்தில் சொர்க்க பள்ளத்தில் உள்ள வீரநாராயண பெருமாள் கோயிலிலும் பரமபத சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் திரளான பக்தர்கள், பொதுமக்கள், அதிகாலை முதல் கோயில் முன் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
