சப்கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு விவசாயிகள் ஒத்துழைக்க முடிவு

முசிறி, ஜன.22: தொட்டியம் தாலுகா, வரதராஜபுரம் ஆகிய கிராமங்களில் காவிரி கூட்டுகுடிநீர் அமைக்க விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் சப்கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொட்டியம் தாலுகா அரசலூர், வரதராஜபுரம் ஆகிய கிராமங்களில் தமிழக அரசு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை துவக்க இருந்தது. இந்நிலையில் தொட்டியம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து பெரியகிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்வதால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் குறைவதால் பாதிப்பு ஏற்படும். விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் எனக்கூறி புதிதாக செயல்பட உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தை தங்கள் பகுதியில் செயல்படுத்துவதை கைவிட வேண்டும் என ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக தமிழக அரசு உள்ளிட்ட பல துறை அலுவலர்களுக்கும் கோரிக்கை மனு விவசாயிகள் அனுப்பியிருந்தனர். இதையடுத்து முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முசிறி சப்-கலெக்டர் ஜோதி சர்மா தலைமை வகித்தார். அப்போது விவசாயிகள் தரப்பில் கூட்டு குடிநீர் திட்டம் தங்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்தும் பாதிப்புகள் பற்றியும் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து தொட்டியம் காவிரி ஆற்றில் நீர் சேகரிக்கும் கிணற்றுக்கு அருகில் நீராதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு தடுப்பணை அமைப்பதற்கான முன்மொழிவுகளை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வது, நீர் சேகரிக்கும் கிணறு கரையில் இருந்து 350 மீட்டரில் இருந்து 700 மீட்டர் தென்புறமாக அமைத்திடவும் கிராம பகுதியை விடுத்து மீதமுள்ள திசைகளில் பக்கவாட்டு துளைகள் மூலம் நீர் எடுத்துக் கொள்வது, 3.57 மில்லியன் லிட்டர் மட்டும் குடி நீர் சேகரிப்பு கிணற்றிலிருந்து எடுப்பது 100 ஹெச்பி மின்மோட்டாரை பயன்படுத்துவது, வரதராஜபுரம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு கண்காணிக்க குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மூன்று பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து கருத்துருக்கள் அனுப்புவது, தற்காலிக மணல் தடுப்பணை அமைத்து கண்காணிப்பு குழுவின் மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டு வரதராஜபுரம் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் தலைமை நீர் சேகரிப்பு கிணறு மற்றும் நடைபாலம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>