தொடர்மழையால் பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணியை உடனே துவங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

விருதுநகர், ஜன.22: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் கருகிய மற்றும் முளைத்த பயிர்களுடன் வந்து மனு அளித்தனர். அப்போது நாராயணசாமி கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்களில் விதைத்த போது மழையின்றியும், படைப்புழு தாக்குதலாலும் 50 சதவீத பயிர்கள் சேதமடைந்தன. தற்போது மார்கழியில் பெய்த தொடர் மழையால் 100 சதவீத பயிர்களும் முற்றிலும் சேதமாகி விட்டன.

மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, பாசிப்பயறு, உளுந்து, வெங்காயம், நெல், சூரியகாந்தி, சோளம், கம்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களும் முற்றிலும் மார்கழி மாத மழையால் அழுகியும், கதிர்களிலேயே முளைத்தும் அழிந்து கிடக்கிறது. தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், மழையால் அழிந்த பயிர்களை கணக்கெடுப்பு செய்ய வேளாண்துறை, வருவாய்த்துறை பணிகளை துவக்கவில்லை.

அதிகாரிகளிடம் கேட்டால் அரசிடம் இருந்து அறிவிப்பு வரவில்லை என தட்டிக் கழிக்கின்றனர். தொடர்மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாவட்டம் முழுவதும் உடனே கணக்கெடுப்பு பணியை துவக்க வேண்டும். சேதாரத்தை கணக்கில் கொண்டு பயிர்களின் கணக்கெடுக்கும் பணியை தொடர்ந்து ஒவ்வொரு பயிருக்கும் உற்பத்தி செலவின் அடிப்படையில் நிவாரணம்  வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>