அவிநாசி, டிச.30: அவிநாசி அருகே பாழடைந்த கிணற்றுக்குள் குப்பை கொட்ட வந்த மாநகராட்சி லாரியை சிறைபிடித்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குட்டைத்தோட்டம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு உள்ளது. இப்பகுதியை சேர்ந்த சிலர் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பாழடைந்த கிணற்றை மண் கொட்டி மூடி பாதுகாப்பு செய்து தரும்படி கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதை ஏற்று, கிணற்றை மூட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகனங்களில் குப்பை கழிவுகளை ஏற்றி கொண்டு வந்து கிணற்றை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த அந்த சுற்றுப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பாழடைந்த கிணற்றில் குப்பைகள் கொட்டக்கூடாது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் குழந்தைகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது, நிலத்தடி நீர், காற்று முற்றிலுமாக மாசு அடையும் என்றும் கூறி குப்பை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். குப்பையில் இருந்து துர்நாற்றம் வராமல் தடுக்க, முறையாக லாரியில் மண் நிரப்பி கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள குப்பையின் மீது கொட்டி, சமன் செய்து கிருமி நாசினி தெளித்து, நோய் பரவாமல் தடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்று அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
