மாநகர பகுதிகளில் பீட்ரூட் சாகுபடி உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர், டிச. 30: திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை, சோளம், தக்காளி, வெங்காயம் மற்றும் சில காய்கறிகள் விளைவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மாநகரப் பகுதிகளில் குறைந்த காலத்தில் மகசூல் தரக்கூடிய காய்கறிகள் விளைவிக்கப்படுவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக பீட்ரூட் சாகுபடி செய்யாத நிலையில் தற்போதுள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப திருப்பூர் மாநகர பகுதிகளில் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. போதிய மழைப்பொழிவு மற்றும் குறைந்த நாட்களில் லாபம் தரும் பயிர் என்பதால் பீட்ரூட் விளைவித்துள்ளனர். குறிப்பாக திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட வீரபாண்டி, கல்லாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பீட்ரூட் சாகுபடி செய்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பீட்ரூட் சாகுபடி செய்வதற்கு 70 முதல் 80 நாட்கள் மட்டும் போதுமானது. மற்ற பயிர்களை ஒப்பிடும்போது இதற்கு பராமரிப்பு செலவு குறைவு. ஏக்கருக்கு 8 முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது. கடந்த சில மாதங்களாக சரியான விற்பனை விலை கிடைக்காத நிலையில் தற்போது கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை சில்லறை விற்பனையில் விற்கப்படுகிறது. அதனால் விவசாயிகளுக்கு சற்று லாபகரமானதாக உள்ளது. அதன் காரணமாக பீட்ரூட் விளைவிக்கப்படுவதாக தெரிவித்தனர். திருப்பூர் மாநகரில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தென்னம்பாளையம் தினசரி சந்தையில் வெளியூர் காய்கறிகளை காட்டிலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளூர் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டுவதால் விலை நிலையாக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Related Stories: