ஈரோடு, டிச. 30: ஈரோடு சின்ன காய்கறி மார்க்கெட் வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் ரூ.11 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டில், சின்ன மார்க்கெட் எனப்படும் தினசரி காய்கறி மார்க்கெட்டும் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு எப்போதும் உணவுக்காக வரும் வாடிக்கையாளர்கள், காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் என பரபரப்பாகவே காணப்படும். குறிப்பாக, கடந்த 12 ஆண்டுகளாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10 சுய உதவி குழுவை சேர்ந்த பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்கள் டோக்கன் வழங்குதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுதல் என தங்களுக்குள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து வேலை செய்து வருகின்றனர். இந்த அம்மா உணவகம், கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பெரிதும் கை கொடுத்தது. இதில், தினசரி 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர்.
ஆனால், நாளடைவில் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த உணவகம் தொடர் வருவாய் இழப்பால், பராமரிப்பின்றி காணப்பட்டது. மேலும், அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்ட போது வாங்கப்பட்ட பாத்திரங்கள், இயந்திரங்கள் பழுதானதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இருப்பினும், சின்ன மார்க்கெட் அம்மா உணவகம் செயல்படும் கட்டிடங்கள் இதுநாள்வரை பராமரிப்பு செய்யாமல் பாழடைந்த நிலையில் கிடந்தது. அக்கட்டிடத்தின் உள் பகுதியில் சமையல் ஆவி, எண்ணெய் படிந்து சுவர்கள் மிகவும் அசுத்தமாக இருந்தது. பல இடங்களில் வெளிச்சமின்றி, போதிய மின் விளக்குகள் இல்லாமல் இருந்தது. மேலும், பொதுமக்கள் உண்பதற்கான மேசைகளின் கால்கள் உடைந்து காணப்பட்டது. இதனால் அங்கு உணவு அருந்த வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
அதுமட்டுமின்றி, அம்மா உணவகத்தின் மாவு அரைக்கும் இயந்திரம் பழுதாகி வெளியில் பணம் கொடுத்து அரைக்கும் நிலை ஏற்பட்டது. சமையல் பாத்திரங்கள் ஓட்டை உடைசலாக மாறியது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், அம்மா உணவகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, உணவின் தரத்தை ஆய்வு செய்தபோது, அவற்றின் நிலையை அறிந்து அம்மா உணவகத்தை சீரமைக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் அர்பித் ஜெயின், அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், அம்மா உணவகத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் துவங்கப்பட்டது. இதில், கட்டிடங்களில் இருந்த விரிசல்கள் சரி செய்வது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, முறையான கழிவுநீர் கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளபட்டது. இவை தவிர, போதிய பாத்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரம், சப்பாத்தி இயந்திரம், மிக்சி உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளது. தற்போது சீரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சின்ன மார்க்கெட்டில் உள்ள அம்மா உணவகம் ரூ.11 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. தற்போது அப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அடுத்த மாதம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இவை தவிர, மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளின் வசதிக்காக, வாயிற்கதவு அமைத்தல், பொருட்களை பாதுகாக்கவும் வகையில் செட் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
