தடிக்காரன்கோணம் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை மறுப்பு ஆஸ்டின் எம்.எல்.ஏ ஆர்.டி.ஒ.விடம் புகார்

நாகர்கோவில், ஜன.22: தடிக்காரன்கோணம், பால்குளம் பகுதிகளை சேர்ந்த பிஎம்எஸ் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் தலைவர் பால்வர்ணன், பிராங்கிளின் மற்றும் எல்பிஎப், அன்னை சோனியா ராகுல், இந்து மஸ்தூர் மகா சபா மற்றும் சிஐடியு சங்கத்தினர் ஆஸ்டின் எம்.எல்.ஏ தலைமையில் நாகர்கோவில் ஆர்டிஒவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எங்களது சங்கத்தில் பதிவு செய்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தடிக்காரன்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எங்களது உறுப்பினர்கள் சுமை தூக்கும் தொழில், பாரம் ஏற்றுதல் இறக்குதல் என்று அன்றாட கூலி அடிப்படையில் செய்து வருகிறோம். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் வெளியூரில் உள்ள ஆட்களை அழைத்து வந்து தடி மற்றும் விறகுகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.

20 ஆண்டுகளாக எங்களது சுமை தூக்கும் தொழிலாளர்களை வைத்துதான் வேலை செய்து வந்தனர்.  மேலும் தவறான தகவல்களை அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பெற்றுள்ளார்கள். இதனால் எங்களது சுமை தூக்கும் தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளோம். ஏற்கனவே கொரோனா கால பாதிப்பினால் பொருளாதார ரீதியாக எங்களது குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே எங்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: