காதல் திருமணத்தால் முன்விரோதம் மணமகன் சகோதரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

*ரூ.2 லட்சம் பணம், 35 பவுன் நகை கருகி நாசம்

*தந்தை, மகன் கைது; 2 பேர் மீது வழக்குப்பதிவு

திருமங்கலம் : திருமங்கலத்தில் காதல் திருமணத்தினால் ஏற்பட்ட முன்விரோதத்தில் மணமகனின் சகோதரி வீட்டில் பெண் வீட்டார் பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில் ரூ.2 லட்சம் பணம், 35 பவுன் நகை மற்றும் கட்டில், பீரோ தீயில் கருகி நாசமானது.

இதுதொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம், திருமங்கலம், சோழவந்தான் ரோடு முகமதுஷாபுரத்தினை சேர்ந்தவர் செல்வம் மகன் அஷ்வந்த்(25). திருமங்கலம் பழனியாபுரத்தினை சேர்ந்த கவிராஜன் மகள் அனிதா(23).

இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் திருமணத்தினை பெண் வீட்டார் ஏற்கவில்லை.

அதனால் இரண்டு குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பேச்சு வார்த்தையில் அனிதா, பெற்றோரிடம் செல்ல மறுத்து கணவர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் அனிதா வீட்டினர் கடும் கோபம் அடைந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதுகுறித்து செல்வம் ஏற்கனவே திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் செல்வத்தின் மூத்த மகள் பிரியதர்ஷினியின் மாமியார் உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவலை அறிந்த செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் டூவிலர்களில் நேற்று முன்தினம் மதுரைக்கு சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பார்த்து நலம் விசாரித்து விட்டு மீண்டும் திருமங்கலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே இவர்கள் வந்தபோது, அஸ்வந்த் வாகனத்தினை வழிமறித்து கவிராஜன் தகராறு செய்துள்ளார். அங்கிருந்த கல்லை எடுத்து எறிந்ததில் செல்வம், அவரது பேத்திக்கு காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் செல்வம், பேத்தியை அழைத்துக் கொண்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார். குடும்பத்தினரும் உடன் சென்றனர். இரவு 11 மணியளவில் திருமங்கலம் எட்டுபட்டரை மாரியம்மன் கோயில் அருகேயுள்ள அஸ்வந்த் சகோதரி பிரியதர்ஷினி் வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக மர்ம நபர்கள், பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தப்பியோடி விட்டார். பிரியதர்சிஷினி வீட்டில் அந்த நேரத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை.

தீ வைத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பிரியதர்ஷினியின் மாமியார் மருத்துவ செலவிற்கு வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.2 லட்சம் மற்றும் சுமார் 35 பவுன் நகைகள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை சுமார் அரைமணிநேரம் போராடி அணைத்தனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசுக்கு புகார் கொடுக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருமங்கலம் டிஎஸ்பி தமிழ்செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இந்த சம்பவம் குறித்து பிரியதர்ஷனியின் கணவர் பாலமுருகன் கொடுத்த புகாரில் பெட்ரோல் ஊற்றி வீட்டில் தீவைத்த கவிராஜன்(42) அவரது மகன் கௌசிக்(20) ஆகியோரை திருமங்கலம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக கவிராஜன் உறவினர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: