கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 21வது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்திய போது அது வழக்கம் போல புரளி என்பது தெரியவந்தது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட மாநகரின் முக்கிய பகுதிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், அதிகாரிகள் சோதனை நடத்துவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை 21வது முறையாக மீண்டும் இ-மெயில் மூலம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த பொருட்களும் கைப்பற்றபடவில்லை. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வழக்கம் போல புரளி என்பது தெரிய வந்துள்ளது.
