பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு ஆய்வு கூட்டம் டிஆர்ஓ தலைமையில் நடந்தது

தேனி, ஜன. 21: தேனி மாவட்டம், பல்லவராயன்பட்டியில் வரும் 24ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தலைமை வகிக்க, காவல், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

தமிழக அரசின் உத்தரவுப்படி பல்லவராயன்பட்டியில் வரும் 24ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. எனவே ஜல்லிக்கட்டு நடத்த உள்ள அமைப்பினர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குழுவினரிடம் எழுத்து பூர்வமான அனுமதியும்,  போட்டியில் பங்கேற்க உள்ள காளைகள், நபர்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பித்து உரிய அனுமதி பெற்றிட வேண்டும். ஜல்லிக்கட்டை

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே நடத்திட வேண்டும்.

கால்நடை பராமரிப்பு துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஒப்புதல் அளிக்கும் காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஜல்லிக்கட்டு அமைப்பினர் பங்கேற்கும் காளைகளின் உடற்திறன் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களிடம் சான்று பெற வேண்டும். போதை மருந்துகள்,  வெறியூட்டும் பொருட்கள் போன்றவற்றை எவ்வடிவத்திலும் பயன்படுத்த கூடாது. காளைகள் வெளியேறும் வழியைத் தடுக்க கூடாது.  கண்காணப்பு கோமிராக்கள் மூலம் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்தல், ஜல்லிக்கட்டு அமைப்பினர் பார்வையாளர் மாடத்தினை உறுதி தன்மையுடன் அமைத்து பொதுப்பணி துறையினரிடமிருந்து பாதுகாப்பு உறுதிச்சான்று பெறுதல்,  பதிவு செய்யப்பட்ட மாடுபிடி வீரர்களை அடையாளப்படுத்தி காட்டுவதற்காக ஒரே மாதிரியான பிரத்யேக உடைகளை வழங்குவதுடன், அவர்கள் அரங்கிற்குள் நுழையும் முன் முழு மருத்துவ பரிசோதனை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர். இதில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயினி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அறிவழகன், பல்லவராயன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஷ்வரி, நாட்டாண்மை பொன்னம்பலம், அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: