இறுதி பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 30 லட்சத்து 4,140 வாக்காளர்கள் 6 தொகுதிகளில் பெண்கள் அதிகம்

சேலம், ஜன. 21: சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 11 சட்டமன்ற தொகுதிகளில்  30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 29,61,568 வாக்காளர்கள் இருந்தனர். இதனை தொடர்ந்து 2020 ஜன.1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடந்தது. இதற்காக நான்கு கட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதன் அடிப்படையில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஆண்கள் 14,95,165 பேர், பெண்கள் 15,08,771 பேர் மற்றும் இதரர் 204 பேர் என மொத்தம் 30,04,140 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர் அதிகமாக உள்ளனர். இதில், கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய 6 தொகுதிகளில், ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2 மாதமாக நடந்த திருத்த பணிகளின் மூலம் 99,840 பேர் புதிதாக சேர்க்கக்கப்பட்டுள்ளனர். மேலும், 57,268 பேர் வாக்காளர் பட்டியலில்இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

18 வயது  பூர்த்தி அடைந்த 46,391 பேர், புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை காட்டிலும், 42,572 பேர் கூடுதலாக இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்,  சேலம் கோட்டாட்சியர் மாறன், திமுக மத்திய மாவட்ட அவைத் தலைவர் சுபாஷ், மாநகர செயலாளர் ஜெயகுமார், மாநகர துணை செயலாளர் கணேசன்,  அதிமுக நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாலு, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், பாஜக நிர்வாகி கோபிநாத்,  சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இணைய தளம் மூலம் www.nvsp.in என்ற முகவரியிலும் voter help line என்ற கைபே‘]சி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளனர்.

தொகுதி    ஆண்    பெண்    இதரர்    மொத்த வாக்காளர்கள்   

கெங்கவல்லி (தனி)    1,15,581    1,22,668    4    2,38,253   

ஆத்தூர்  (தனி)    1,22,440    1,31,348    12    2,53,800    

ஏற்காடு (தனி)    1,38,409    1,44,231    16    2,82,656

ஓமலூர்    1,51,085    1,43,623    4    2,94,712

மேட்டூர்    1,45,073    1,40,687    7    2,85,767    

இடைப்பாடி    1,44,757    1,39,597    24    2,84,378

சங்ககிரி    1,38,013    1,35,110    20    2,73,143             

சேலம்(மேற்கு)    1,48,477    1,49,452    56    2,97,985

சேலம் (வடக்கு)    1,34,319    1,40,436    21    2,74,776

சேலம் (தெற்கு)    1,26,698    1,32,508    23    2,59,229

வீரபாண்டி    1,30,313    1,29,111    17    2,59,441

மொத்தம்    14,95,165    15, 08,771    204    30,04,140

Related Stories: