திருவள்ளூர், பிப்.27: திருவள்ளூரில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் வகையில், மாநில தகவல் ஆணையர் நேரடி விசாரணை நடத்தினார். திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளை சார்ந்த தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் கீழ், 60 மேல்முறையீட்டு மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த, மனுக்களின் மீது தீர்வு காணும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2ம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் நேரடி விசாரணை மேற்கொண்டார். அப்போது, 48 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும். மீதமுள்ள 12 மனுக்கள் விசாரிக்கப்பட்டு மறு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது. இதில், மாநில தகவல் ஆணையத்தின் அலுவலர்கள், மனுதாரர்கள், சம்பந்தப்பட்ட துறைகளின் பொது தகவல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
