மழை பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு தொகை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

திருவாரூர், ஜன.21: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 800 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம் வழங்கிட வேண்டும், விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்திட வேண்டும் ,பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை முழுமையாக பெற்றுத்தர வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பாக விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் மாவூர் கடைத்தெருவில் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் தலைமையில் நடந்த மறியலில் 33 பேரும், மாங்குடி கடைத்தெருவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜ் தலைமையில் நடந்த மறியலில் 40 பேரும், ஆண்டிபாளையத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமையில் நடந்த மறியலில் 15 பேரும், பேரளம் கடைத்தருவில் ஒன்றிய செயலாளர் கவுதமன் தலைமையில் நடந்த மறியலில் 40 பேரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 48 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட நிலையில் 15 இடங்களில் மட்டும் சுமார் 800 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியார் சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு அதன் ஒன்றிய செயலாளர் சடேசதமிழார்வன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒளிமதியில் நடந்த சாலை மறியலுக்கு அதன் ஒன்றிய தலைவர் ராதா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராவணன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பாரதி மோகன், ஒன்றிய செயலாளர் டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, கொரடாச்சேரி ஒன்றிய துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் வெட்டாறு பாலத்திலும், ஒன்றிய செயலாளர் கேசவராஜ் தலைமையில் அம்மையப்பனிலும் சாலை மறியல் நடந்தது. மறியலில் பங்கேற்ற 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

வலங்கைமான்: வலங்கைமான், ஆவூர் மற்றும் ஆலங்குடி ஆகிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆவூரில் விவசாய சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன் தலைமையில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நிர்வாக குழு கலியமூர்த்தி ரவி, வி.தொ. ஒன்றிய தலைவர் மருதையன், இளைஞர் பெருமன்றம் ஒன்றிய துணை செயலாளர் லெனின்ராஜ் உள்ளிடோர் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மன்னார்குடி: கோட்டூர் ஒன்றியத்தில் திருப்பத்தூர், கோட்டூர், காசான்குளம், பெருகவாழ்ந்தான், திருமக்கோட்டை, ஒரத்தூர், சேந்தங்குடி உள்ளிட்ட 7 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. கோட்டூர் கடை வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வை.சிவபுண்ணியம் தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

மன்னார்குடி அருகே சவளக்காரனில் இந்திய கம்யூ. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி ஆகியோர் தலைமையில் நடந்த மறியலில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

மன்னார்குடி கீழப்பாலம் அருகே இந்திய கம்யூ. நகர செயலாளர் கலைச்செல்வன், விவசாய சங்க நகர செயலாளர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் கார்த்திகேசன் ஆகியோர் தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டங்களில் அடுப்பு பற்ற வைத்து சமையலில் ஈடுபட்டனர். மேலும் கனமழையால் சேதமடைந்து  அழுகிய சம்பா நெற்கதிர்களை கைகளில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷங்களை எழுப்பினர்.

Related Stories:

>