10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத செங்காடு-வலசை வெட்டிக்காடு சாலை

போரூர், டிச.24: ஸ்ரீபெரும்புதூரில் 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத செங்காடு – வலசை வெட்டிக்காடு சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் வலசை வெட்டிகாடு கிராமத்தையும், காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தையும் இணைக்கு செங்காடு-வலசை வெட்டிகாடு சாலை உள்ளது. இரண்டு கிராம மக்களும் செங்காடு சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மேலும் இரண்டு மாவட்ட எல்லையில் இந்த சாலை அமைந்துள்ளது. இதனால் இந்த இரண்டு மாவட்ட நிர்வாகத்தினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று இரண்டு கிராம மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது; காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அடங்கிய செங்காடு பகுதியில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தற்பொது திருவள்ளூர் மாவட்டம் வலசை வெட்டிகாடு கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் செங்காடு-வலசை வெட்டிகாடு சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் இந்த வழியாக சென்று வருகின்றனர். இந்த சாலை வழியாக பஸ் வசதி இல்லை. பெரும்பாலானோர் பைக், கார், வேன் மூலம் பள்ளி கல்லூரி மற்றும் தொழிற்சாலைக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் இந்த சாலை உள்ளது, ஆனால் இந்த இரண்டு மாவட்ட நிர்வாகமும் இந்த சாலையை சீர்மைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கைவிடுத்தனர்.

Related Stories: