பொன்னை, டிச.24: சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள குளறுபடிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பணிகள் கடந்த 4ம் தேதி தொடங்கி 14ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடக்க நிலையிேலயே தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பணி தொடர்பாக அரசியல் கட்சிகள் மத்தியில் அதிருப்தி குரல்கள் எழுந்தன. ஆனாலும், தமிழ்நாட்டில் இப்பணி நடந்து முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் 19ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், இந்த பட்டியலில் இறந்தவர்கள் ஏராளமானோரின் பெயர்களும், முகவரி மாறி சென்றவர்கள், வெளியூர் சென்றவர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளன. அதேபோல் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டு குளறுபடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கேற்ப வேலூர், காட்பாடி சட்டமன்ற தொகுதிகளில் தகுதியான பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது. காட்பாடி தொகுதி பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சியில் வார்டு எண் 4ல் விசாலாட்சி(82) என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் ஆனால் அவரது பெயர் வரிசை எண் 352ல் இடம் பெற்றுள்ளது. அதேபோல் அதே கீரைசாத்து ஊராட்சியில் மேலும் சில இறந்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காட்பாடி கல்புதூர் ராஜீவ்காந்தி நகரில உமாபதி என்பவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள பலரது பெயர்களும் இந்த பட்டியலில் விடுப்பட்டுள்ளதாக புகார் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
