மாட்டுச்சந்தையில் ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் வேலூர் அடுத்த பொய்கை

வேலூர், டிச.24: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ஒட்டுமொத்தமாக ரூ.90 லட்சத்துக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும். இந்நிலையில் நேற்றைய தினம் சந்தைக்கு 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றுடன் கால்நடைகள் உட்பட பிற கால்நடைகளுக்கு தேவைப்படும் பொருட்கள், காய்கறிகள் என அனைத்தும் சேர்ந்து வர்த்தகம் ரூ.90 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மழையின் காரணமாக தீவனம் தட்டுப்பாடு இல்லை. இதனால் மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இவைகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. விற்பனையும் ரூ.90 லட்சத்துக்கு நடந்தது. விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்றனர். பொய்கை மாட்டு சந்தை அருகே உள்ள சர்வீஸ் சாலையிலேயே, கோழி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சந்தை கால்நடை வாங்கபவர்களும், சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே பொய்கை சந்தை நடைபெறும் நாட்களில் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: