வேலூர், டிச.24: காட்பாடி அடுத்த கழிஞ்சூரை சேர்ந்தவர் எழிலரசி(27). இவர் நேற்று முன்தினம் காங்கேயநல்லூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.1.80 லட்சம் பணத்துடன் ஆட்டோ மூலம் வீட்டிற்கு சென்றார். வீட்டின் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கிய எழிலரசி, பணப்பையுடன் கழிஞ்சூர் பாரதிதாசன் சாலையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்தபடி பதிவு எண் பிளேட் இல்லாத பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், திடீரென எழிலரசியிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த எழிலரசியின் கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனாலும் பைக் ஆசாமிகள் 2 பேரும் தப்பியோடிவிட்டனர். இதுதொடர்பாக எழிலரசி கொடுத்த புகாரின் பேரில் விருதம்பட்டு போலீஸ் எஸ்ஐ பாரத் வழக்குப் பதிவு செய்து பெண்ணிடம் பணத்தை பறித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகிறார். மேலும், சம்பவம் தொடர்பாக வங்கியில் இருந்து இளம்பெண் வீடு வரை ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
