புதுச்சேரி, டிச. 16: புதுச்சேரியில் 2026 சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். தமிழகம், புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகளை டெல்லி அழைத்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்தது. இதையடுத்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், முன்னாள் தலைவர் ஏவி சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், பாலன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களான மணிஷ் திவாரி, புதுவை பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், சூரஜ், ஹெக்டே உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். ஒரு மணி நேரமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது, தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், விருப்ப மனுக்கள் விபரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. புதுச்சேரியில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியானது, 2011ல் ரங்கசாமி அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியதால் பின்னடைவை சந்தித்தது. ஆனால் அடுத்த வந்த பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தது. கடைசியாக நடந்த 2021 தேர்தலுக்கு முன்பு நமச்சிவாயம், சிவக்கொழுந்து, மல்லாடி கிருஷ்ணாராவ் போன்ற பிரபலங்கள் அக்கட்சியிலிருந்து விலகியதால் 15 தொகுதியில் போட்டியிட்டும் 2 எம்எல்ஏக்களே மட்டுமே கிடைத்தனர். 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
