பாடுபட்டும் பலன் இல்லாமல் போனது வயலில் முளைத்த நெல்மணிகளை அறுவடை செய்த விவசாயிகள் அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை

மானாமதுரை, ஜன.21: மானாமதுரை பகுதியில் மழையால் முளைத்து வீணாகிய நெல்லை விவசாயிகள் வேதனையுடன் அறுத்து வெயிலில் காயவைத்து வருகின்றனர். மானாமதுரை பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர்மழை காரணமாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் முளைத்து வயல்களில் தேங்கிய நீரில் அழுகத்துவங்கின. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின்றி வெயில் அடிக்க துவங்கியதை அடுத்து மூன்றடி நீரில் மூழ்கி கிடந்த நெல்பயிர்களை இயந்திரம் இன்றி விவசாயிகளே குடும்பத்துடன் சேற்றில் இறங்கி அறுத்து தலைச்சுமையாக வீட்டிற்கும் கதிரடிக்கும் களத்திற்கும் கொண்டு செல்கின்றனர்.

கதிருடன் முளைத்து நிற்கும் நெல்மணிகள் ஈரம் காரணமாக வைக்கோலில் இருந்து உதிராமல் உள்ளது. அவற்றை பிரித்தெடுக்க உரல், பாறாங்கலில் அடித்து நெல்மணிகளை உதிர்த்து வருகின்றனர். இவற்றில் பெரும்பான்மையான கதிர்களில் இருந்து நெல்மணிகள் நாற்றுகளாக முளைத்துள்ளன.

இதில் மிஞ்சியவற்றை கதிரடித்து வீட்டு தேவைக்காக சேமித்து வைக்கும் பணி நடந்து வருகிறது. உழைத்து உழைப்பும், உரம், பூச்சி மருந்து என செலவழித்த தொகையும் வீணாகியதால் மனம் நொந்த விவசாயிகள் சாப்பாட்டு தேவைக்காகவாவது இருப்பதை சேமிப்போம் என்ற மனநிலையில் அறுவடைப்பணிகள் நடந்து வருகின்றது.

இதுகுறித்து நவத்தாவு விவசாயிகள் ராமு, பழனிமுத்து கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக பாடுபட்டு காப்பாற்றிய நெல்வயல்கள் கனமழையால் மூழ்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏக்கருக்கு இருபதாயிரம் வரை செலவு செய்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. வழக்கமாக ஏக்கருக்கு 30 முதல் 32 மூட்டைகள் கிடைக்கும் வயலில் இந்த முறை இரண்டரை மூட்டை மட்டுமே கிடைத்தது. இதனால் பாடுபட்டும் பலன் இல்லாமல் போய்விட்டது. அரசு இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Related Stories: