உழவர் சந்தையின் 27ம் ஆண்டு விழா விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்

*கீரை கட்டுகளை இலவசமாக வழங்கினர்

சேலம் : சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையின் 27ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.தமிழகத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில், கடந்த 1999ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, உழவர் சந்தைகளை தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முதலில் மாநகரில் (சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை) 4 இடங்களிலும், புறநகரில் 7 இடங்களிலும் என 11 உழவர்சந்தைகள் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சமீபத்தில் மேலும் 2 இடங்களில் தொடங்கப்பட்டு, தற்போது 13 உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.இதனிடையே சூரமங்கலம் உழவர் சந்தையின் 27வது ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று காலை நடந்தது.

இதனை முன்னிட்டு விவசாயிகள் ஒன்று திரண்டு, நுகர்வோர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும், உழவர் சந்தையின் 27வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, விவசாயி ஒருவர் தான் கொண்டுவந்திருந்த கீரை கட்டுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். இதில், வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதே போல், அம்மாப்பேட்டை, ஆத்தூர் 3 உழவர் சந்தைகளில் நேற்று 27வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி உழவர்சந்தைகளில் விவசாயிகள், சந்தைக்கு வந்திருந்த நுகர்வோர்களுடன் இணைந்து கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். சந்தைகளுக்கு வந்திருந்த நுகர்வோர்களுக்கு விவசாயிகள் சிலர், கீரை கட்டுகளை இலவசமாக வழங்கினர்.

Related Stories: